கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் காவல்துறையினருக்கு சட்டவிரோதமாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு மினி வேனை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் 2 1/2 டன் ரேஷன் அரிசி இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து வேனில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சுந்தராபுரம் பகுதியில் வசிக்கும் கண்ணன், வல்லரசு, ராஜேஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் வண்டிக்காரன் புதூர், கொம்பனூர் போன்ற பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி கேரளாவிற்கு கடத்த முயற்சி செய்துள்ளனர். அதன் பின் ரேஷன் அரிசியை கடத்திய குற்றத்திற்காக 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மினி வேன் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.