பசியால் தவிக்கும் தெருநாய்கள் மற்றும் குதிரைகளுக்கு அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் உணவு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி உள்ளிட்ட அனைத்து கடைகளையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஹோட்டல்களில் பார்சல் மூலம் உணவு வழங்க மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெருநாய்கள், குதிரைகள் போன்ற கால்நடைகள் உணவு கிடைக்காமல் சாலையில் அங்கும் இங்கும் சுற்றி திரிகின்றன. எனவே கால்நடை மற்றும் பராமரிப்பு துறையினர் சார்பில் தினமும் தெருநாய்கள் மற்றும் குதிரைகளுக்கு உணவுகள் வழங்கப்படுகிறது.
இதுபற்றி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பகவத்சிங் தெரிவிக்கும் போது, தினமும் ஊட்டி மற்றும் குன்னூர் பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு 20 கிலோ உணவு பொருட்கள் முட்டை, இறைச்சி போன்றவற்றுடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னார்வலர்களும் தங்களது சார்பில் தெரு நாய்களுக்கு உணவினை வழங்கி வருகின்றனர். இந்த முழு ஊரடங்கு சமயத்தில் 90 மூட்டைகளில் கோதுமை தவிடு போன்றவை 72 குதிரை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதோடு மாவட்ட கலெக்டர் குதிரைகளுக்கு உணவு அளிப்பதற்காக 2 லட்ச ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.