நாமக்கல் மாவட்டத்தில் ஆக்சிஜனை ஏற்றி சென்ற லாரி விபத்திற்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு நுரையீரல் மிகவும் பாதிப்படைகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் வைக்கும் நிலை ஏற்படுகின்றது. எனவே தற்போதைய காலகட்டத்தில் ஆக்சிஜன் மிகவும் அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் இருந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு டேங்கர் லாரி மூலம் 3¼ டன் திரவ ஆக்சிஜன் சென்று கொண்டிருந்துள்ளது.
அப்போது நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள களங்காணி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக லாரியின் முன்பக்க டயர் வெடித்துள்ளது. இந்நிலையில் நிலைதடுமாறய லாரி மேம்பாலத்தில் இருந்து 10 அடி கீழே உள்ள சர்வீஸ் சாலையில் கவிழ்ந்து விழுந்து ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் டேங்கர் லாரியின் டிரைவர் ஸ்டீபன்(52) பலத்தகாயம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் லாரி டிரைவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக கிரேனின் உதவியுடன் லாரியை மீட்டு ஆக்சிஜன் கசிவை நிறுத்தியுள்ளனர். மேலும் மற்றொரு லாரி மூலம் சேலம் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டது.