ஓடும் ரயிலில் மனைவி உயிரிழக்க 3வயது கைக்குழந்தையுடன் கணவர் ரயில்வே நிலையத்தில் தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு நாளும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மக்கள் பொருளாதார ரீதியாக பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். தொற்று காரணமாக பலர் உயிரிழந்து வந்தாலும் பசியினால் உயிரிழக்கும் ஏழை களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அதேபோல் 35 வயதான கிரித்தா என்ற நபர் மேற்குவங்க மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார். இவர் ஊத்துக்குளியில் தேங்காய் நார் உரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 24 வயதில் சர்தார் என்ற மனைவியும், 3 வயது குழந்தையும் உள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக சர்தார் காசநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாமல் தவித்த அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு முடிவு செய்தனர். இதையடுத்து மங்களூரு ரயிலில் திங்கட்கிழமை மாலை புறப்பட்டு சென்னை வந்தனர். பின்னர் காட்பாடி அருகே சர்தார் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
அங்கு மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். இதையடுத்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் அவர்கள் மூவரும் இறங்கினர். சர்தாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். கைக்குழந்தையுடன் ரயில்வே நிலையத்தில் கணவன் தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் ரயில்வே துறையினர் அவரது மனைவியின் உடலை தகனம் மேடைக்கு கொண்டு சென்று இறுதி சடங்கை செய்தனர். தொழிலாளி தனது கைக்குழந்தையுடன் சொந்த ஊருக்கு செல்ல தேவையான அனைத்து வசதிகளையும் வட்டாட்சியர் செய்து கொடுத்தார். இதன் பின்பு அவர் தனது குழந்தையுடன் சொந்த ஊருக்கு சென்றார்.