இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று முதல் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு ஊரடங்கு நீட்டிப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 36 மாவட்டங்களில் 18 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரடங்கு தளர்வுகள் அறிவித்திருந்த நிலையில், ஊரடங்கு நீட்டிப்பதாக மகாராஷ்டிரா அரசு திடீர் என அறிவித்துள்ளது. பல கிராம புறங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் முழு ஊரடங்கை முழுமையாக தளர்த்தும் நிலை இல்லை என்று அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது பரிசீலனையில் இருப்பதால் முதல்வர் உத்தவ் தாக்கரே இறுதியாக முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.