பாகிஸ்தானில் நாடக படப்பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களை பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான நாடக படபிடிப்பு கராச்சி நகரில் உள்ள பங்களா ஒன்றில் நடத்தப்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த நாடக தயாரிப்பாளரிடம் பங்களாவின் காவலர் குல் பாய் என்பவர் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் கோபமடைந்த காவலர் படபிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களை நோக்கி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். மேலும் அதில் காயமடைந்தவர்களுக்கு 22 முதல் 40 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து வந்த கராச்சி காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாவலரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.