மேட்டூர் அணையின் பாசனத்தின் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருடந்தோறும் ஜூன்-12 ஆம் தேதி முதல் ஜனவரி-28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.33 அடியாக உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 12ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் உழவு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் குறுவை சாகுபடிக்கான விதை நெல் மற்றும் உரம் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.