சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள விடுதி உரிமையாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களுக்கு கோடை சீசனை முன்னிட்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தமிழகத்தின் கொரோனா பெருத்தொற்றின் 2 – வது அலை வேகமாக பரவி வருவதால் சுற்றுலா தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஊட்டி நகரில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு என 1,500-க்கு மேற்பட்ட தங்கும் விடுதிகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளது. இதனை தொடர்ந்து ஆண்டுதோறும் வழக்கமாக கோடை சீசனில் தங்கும் விடுதிகளில் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டு நாள் ஒன்றுக்கு வாடகை 2000 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை வசூலிக்கப்படும்.
தற்போது இருக்கும் சூழ்நிலையில் சுற்றுலா பயணிகள் யாரும் வராத காரணத்தால் தங்கும் விடுதிகளில் இருக்கும் அனைத்து அறைகளும் காலியாக இருக்கிறது. இதனால் விடுதி உரிமையாளர்களுக்கு 6 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருமானமின்றி தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தொழிலாளர்களை வேலைக்கு வர வேண்டாம் என்று விடுதி உரிமையாளர்கள் கூறியுள்ளனர். மேலும் அங்கு வேலை பார்க்கும் வரவேற்பாளர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து வீடுகளில் வறுமையில் தவித்து வருகிறார்கள்.