அமெரிக்காவில் திருமணம் செய்த அடுத்த நிமிடமே காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியை சேர்ந்த ஹார்லி மோர்கன் (19 வயது) தனது தோழியான பவுட் ரியாக்ஸை (20 வயது ) காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் அங்குள்ள ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் திருமணம் செய்து கொண்டு, பின் அதற்குரிய பதிவில் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்தனர்.
பின்னர் பார்க்கிங்கில் விட்டு விட்டு வந்திருந்த தங்களது காரில் இருவரும் சென்று ஏறினர். அப்போது காரை எடுக்கவும் வேகமாக சாலையில் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று அவர்கள் காரின் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் கார் வேகமாக நான்கைந்து முறை உருண்டு சென்றது. இதனால் இந்த ஜோடி குடும்பத்தினர் கண்முன்னே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவம் அறிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து மோர்கனின் அம்மா கூறும்போது, “அவர்கள் இருவரையும் திருமணத்திற்கு வாழ்த்த வந்தேன். ஆனால் அவர்களை வாழ்த்த முடியாமல் அவர்களது இழப்பை பார்க்க வேண்டியதாகிவிட்டது. அந்த குழந்தைகளுக்கு நிறைய கனவுகள் இருந்தது. எல்லாமே ஒரு நிமிடம் போய்விட்டது என்று கண்ணீர் மல்க கூறினார். திருமணமான அடுத்த நொடியிலேயே காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் உறவினர் மட்டுமின்றி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது