தானியங்களின் உற்பத்தி அதிகமாக இருந்தாலும் உணவு பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருப்பதாக ஐநாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.
உணவு மற்றும் வேளாண் அமைப்பின், உணவு விலை குறிப்பீட்டில், இந்த மே மாதம் 127.1 % உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தை விட உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் வருடம், மே மாதத்தை காட்டிலும் 39.7% உயர்வாகும். இதில் சர்க்கரை, சமையல் எண்ணெய் மற்றும் தானியங்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. அதாவது கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவில் அதிகமாக விலை உயர்ந்துள்ளது.
ஏப்ரல் மாதத்துடன், தானிய விலை குறியீட்டை ஒப்பிட்டால் 6% அதிகரித்திருக்கிறது. சோளத்தின் விலையும் அதிகமாகவே உயர்ந்திருக்கிறது. எனினும் அமெரிக்காவின் சோளம் உற்பத்தி அதிகமாக இருந்ததால் தற்போது மே மாத கடைசியில் சோளத்தின் விலை சிறிது குறைந்திருக்கிறது.
மேலும் சர்க்கரை 6.8 % ஆக உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் கரும்பு அறுவடை தாமதம் ஏற்பட்டதால் தான் என்று உணவுகள் மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் உலகிலேயே பிரேசில் தான் சர்க்கரை உற்பத்தியில் முதலாக உள்ளது. அங்கு சர்க்கரை உற்பத்தி குறைவது வருத்தமளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறைச்சி விலை கடந்த ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் 2.2% ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் அதிக இறக்குமதி செய்யப்பட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் பால் பொருட்களின் விலையும் 1.8% ஆக உயர்ந்திருக்கிறது.