ஐக்கிய அரபு அமீரகத்தில், இந்தியர் ஒருவரை மரண தண்டனையிலிருந்து, இந்திய தொழிலதிபர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பேக்ஸ் கிருஷ்ணன் என்ற நபர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்திருக்கிறார். அப்போது கடந்த 2012ஆம் வருடம் செப்டம்பர் மாதம், வாகனத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக ஒரு சிறுவன் மீது மோதிவிட்டார். இதில் சூடான் நாட்டை சேர்ந்த அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதனைத்தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் நீதிமன்றம், கண்காணிப்பு கேமராக்களின் மூலம் குற்றத்தை உறுதிப்படுத்தி, அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துவிட்டது. எனவே அவரை காப்பாற்ற குடும்பத்தினரும் நண்பர்களும் போராடினர். எனினும் முடியவில்லை. இதற்கிடையில் உயிரிழந்த சிறுவனின் குடும்பம் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து, வெளியேறி சூடானுக்கு குடிபெயர்ந்தது.
இதனால் அவர்களிடம் மன்னிப்பு கோர முடியவில்லை. அதன்பிறகு கிருஷ்ணனின் குடும்பத்தினர், லூலூ குழுமத்தின் தலைவர், யூசுப் அலியை சந்தித்துள்ளனர். தொழிலதிபரான அவர், அச்சிறுவனின் குடும்பத்தாருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கினார். கடந்த ஜனவரி மாதம், அந்த சிறுவனின் குடும்பத்தினர் கிருஷ்ணனுக்கு மன்னிப்பு வழங்கினர்.
அதன் பின்பு கிருஷ்ணனை விடுதலை செய்வதற்காக, யூசுப் அலி நீதிமன்றத்தில் 5,00,000 திர்ஹாம் (இந்திய மதிப்பில் 1 கோடி) இழப்பீடாக செலுத்தினார். எனவே கிருஷ்ணனின் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டது. தற்போது அவர் அல் வாட்பா சிறையில் இருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது, “எனக்கு இது மறுபிறவி போன்றது. வெளி உலகை காணும் நம்பிக்கையை இழந்துவிட்டேன்.
இது எனக்கு இலவசமாக கிடைத்த வாழ்க்கை. என் குடும்பத்தை பார்ப்பதற்கு செல்லும் முன்பாக யூசுப் அலியை ஒரு தடவை பார்க்க விரும்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.