விவசாய நிலத்திற்குள் காட்டு யானைகள் நுழைந்து தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உடையார்கோணம் பகுதியில் விவசாய நிலங்களுக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் கூட்டமாக புகுந்து தென்னை, வாழை போன்றவற்றை சேதப்படுத்தி வந்துள்ளது. இதனால் வனத்துறை வீரர்கள் அப்பகுதியில் இருக்கக்கூடிய கிராம மக்களின் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டி அடித்துள்ளனர். மேலும் அந்தப் பகுதியில் காட்டு யானைகள் வராமல் தடுப்பதற்காக அகழிகள் தோண்டப்பட்டபோதும் ஆனைக்கல் பகுதியில் உள்ள செல்வன் தென்னந்தோப்புக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி நாசம் செய்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் இருக்கக்கூடிய கிராம மக்கள் விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை யானையை விரட்டி அடிப்பதற்காக முயன்றபோது அது அங்குமிங்குமாக திரிந்து பின்பு காட்டு பகுதிக்குள் சென்று விட்டது. இச்சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது . இவ்வாறு காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.