யானை தாக்கி காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். மேலும் மாணிக்கம் அங்குள்ள டென்னிஸ் கோர்ட் பங்களாவில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணிக்கு சென்ற மாணிக்கம் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி பூங்காவனம் அந்த பங்களாவிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது பங்களாவுக்கு வெளியே இருக்கும் தோட்ட பகுதியில் மாணிக்கம் யானை தாக்கி உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த காடம்பாறை காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இரவு நேரத்தில் யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால் வேலைக்கு செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் யானைகளை பார்த்தால் அவற்றை துரத்துவதற்கு பதிலாக வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.