ராமநாதபுரத்தில் வீட்டில் வைத்து சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய நபரை போலீசார் கைது செய்து 20 லிட்டர் சாராய ஊறலையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் ஊரடங்கு காலத்திலும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது தொடர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கேணிக்கரை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காட்டூரணி எம்ஜிஆர் நகர் பகுதியில் வீட்டில் வைத்து ஒருவர் சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது எம்ஜிஆர் நகரில் வசிக்கும் தெய்வம்(46) என்பவரது வீட்டிற்கு பின்னால் குக்கரில் வைத்து சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் உடனடியாக அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த 3 சாராய பாட்டில்கள், 20 லிட்டர் சாராய ஊறல் மற்றும் குக்கரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.