திருவாரூரில் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருவதாக நாகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதிகளை தகரத்தால் அடைத்தல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தி உரிய பரிசோதனை செய்யப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள் வழிகாட்டுதலின்படி, திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் தலைமையில் துப்புரவு அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தி வீடுவீடாகச் சென்று உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவு கண்டறியும் கருவிகள் மூலம் பரிசோதனை செய்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் பிரபாகரன் கூறும்போது மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. இதுவரையிலும் மாவட்டத்தில் 1,200 வீடுகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
இதனையடுத்து பொதுமக்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கொரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று திரு. பிரபாகரன் கூறியுள்ளார். மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் போன்றவை வாகனங்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றது. எனவே இந்த அறிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி வீட்டைவிட்டு வெளியில் செல்லாமல் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் நகராட்சி ஆணையர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.