டாஸ்மார்க்கில் திருட முயற்சி செய்த மர்ம நபர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வாரியாபட்டி பகுதியில் மதுபான கடை ஒன்று இயங்கி வந்துள்ளது. தற்போது முழு ஊரடங்கு என்பதால் அரசின் உத்தரவுப்படி இந்த மதுபான கடை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் மதுபான கடையில் வெளிச்சம் தெரிவதை பார்த்துள்ளனர். இதனையடுத்து அங்கு காவல் துறையினர் விரைந்து சென்று பார்த்த போது சில மர்ம நபர்கள் மதுபான கடையின் சுவற்றில் துளையிட்டு மதுபானங்களை திருட முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அந்த மர்ம நபர்கள் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அதன்பின் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மதுபானகடை அதிகாரிகள் உள்ளே சென்று பார்த்தபோது மதுபானங்கள் எதுவும் திருடு போகவில்லை. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டாஸ்மார்க் கடையில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.