கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அவளூர் காவல்துறையினர் பெரும்புலிப்பாக்கம் பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் களத்தூர் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் களத்தூர் கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கார்த்தி மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் லாரி மூலம் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு அங்கு விற்பனை செய்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த 4 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.