ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கொரோனாவால் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க அந்நிறுவனம் முன்வந்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.கொரோனா இரண்டாம் அலை காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றன. அவர்களுக்கு அரசு உதவித் தொகைகளை வழங்கி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தின் செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து வருகின்றது.
இதைத்தொடர்ந்து தற்போது ரிலைன்ஸ் நிறுவனமும் தங்களுடைய நிறுவன ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனாவால் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு 5 ஆண்டு வரை மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்த பணியாளர்களின் குழந்தைகள் இளங்கலை பட்டபடிப்பு முடிக்கும் வரை அவர்களுக்கு ஆகும் கல்வி செலவு அனைத்தையும் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்துள்ளது.
மேலும் ஊழியர்களின் மனைவி, பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் முழு மருத்துவ செலவையும் நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஊழியர்கள் ஒவ்வொருவரின் இழப்பும் அந்த குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத ஒன்று. அவர்களின் இழப்பை எங்களால் ஈடு செய்ய முடியவில்லை என்றாலும், உங்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.