மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டை பகுதியில் மணிகண்டன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஓவியா என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் மணிகண்டன் தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சாலையில் இருந்த வேகத்தடை மீது ஏறி இறங்கும் போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதால் 3 பேரும் கீழே விழுந்து விட்டனர்.
இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வசந்தி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கிருஷ்ணகிரி தாலுகா காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.