பழனி ரெயில் நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக மதுபானங்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மதுக்கடைகள் இயங்காத நிலையில் மது பிரியர்கள் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதினை தடுக்கவும், மது விற்பனையை தடுக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லுக்கு மைசூரிலிருந்து சில நாட்களுக்கு முன்பு வந்த ரெயிலில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரை ரயில்வே காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.
இதையடுத்து தற்போது காவல்துறையினர் அனைத்து ரயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பழனிக்கு கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து வந்த ரெயிலில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டதோடு, முககவசம் அணியாதவர்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும் கேரளாவிலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் அங்கிருந்து மதுபானங்கள் சட்டவிரோதமாக கடத்த வாய்ப்புள்ளதாக பழனி ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் கூறியுள்ளார். இதன் காரணமாக பழனி வழியாக செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.