மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி கிராமத்தில் ஆட்டோ டிரைவர் சரவணகுமார் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணகுமார் அவரது மோட்டார் சைக்கிளில் கடந்த 30-ஆம் தேதி இரவில் அனேரி கிராமப்பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது சரவண குமார் தாமலேரி முத்துர் மேம்பாலம் அருகே வந்து கொண்டிருக்கும்போது தனது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தவறி விழுந்து விட்டார்.
இதனால் பலத்த காயமடைந்த சரவணகுமாரை அருகில் இருப்பவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சரவணக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.