ஆம்பூர் அருகில் சட்டவிரோதமாக மது பாக்கெட்டுகள் கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடச்சேரி பகுதியில் உமராபாத் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் கர்நாடக மாநிலம் மது பாக்கெட்டுகள் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர்கள் மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த தாமரைக்கனி மற்றும் கீழ் மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் மது பாக்கெட்டுகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி வந்த குற்றத்திற்காக இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.