கொட்டையூர் நெல் கொள்முதல் நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொட்டையூர் நெல் கொள்முதல் நிலையத்தில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெற்பயிர்களை விற்று வருகின்றனர். இந்நிலையில் நாா்த்தாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் கொட்டையூர் நெல்கொள்முதல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது நாா்த்தாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் கொட்டையூரை சேர்ந்த விவசாயிகளிடம் தகராறு ஈடுபட்டு இருதரப்பினருக்கும் இடையில் மோதல் நிலவியதால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து நாா்த்தாங்குடி கிராமத்தைச் சேர்ந்த திலீபன் என்பவரும் கொட்டையூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த தேவா என்பவரும் தனித்தனியாக வலங்கைமான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து தகராறில் ஈடுபட்ட கொட்டையூர் வடக்கு தெருவைச் சேர்ந்த விஜய், லெனின், இளவரசன், பகவத்சிங் மற்றும் நாா்த்தாங்குடி பகுதியைச் சேர்ந்த ரகுபதி, இரணியன், சன்மானம், ரகுநாத் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.