தீபாவளிக்கு பேருந்தில் செல்ல விரும்புவோர் நாளை முதல் முன் பதிவு செய்து கொள்ளாலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், வெளியூர்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதால் பேருந்து ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். தீபாவளி பண்டிகையின்போது தென்மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், தேவைக்கு ஏற்ப இயக்கவும் தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
ஆனால் சிறப்பு ரயில்களிலும் முன்பதிவு முடிந்து விடும் பட்சத்தில், பெரும்பாலான தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்வர். சென்னையில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் 1,600 பேருந்துகளில் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். அவற்றில் பயணிக்க 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
அதன் படி அக்டோபர் 25-ஆம் தேதி சொந்த ஊருக்குச் செல்வோருக்கு நாளை ஆகஸ்ட் 27-ஆம் தேதி முன்பதிவு தொடங்குகிறது. www.tnstc.in மற்றும் இரண்டு தனியார் இணையதளங்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் தீபாவளிப் பண்டிகையின் போது எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்குவது என்பது குறித்தும் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் அடுத்த இரண்டு வாரங்களில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகவும் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.