வெப்பச்சலனம் மற்றும் குமரிக்கடல் மற்றும் இலங்கையையொட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.
திருவாரூர், நன்னிலம், புலிவளம், அம்பை, மாங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறை காற்றுடன் மழை பெய்தது. இதேபோல நாகை, புதுக்கோட்டை, அறந்தாங்கி பகுதிகளிலும் காற்றுடன் பெய்த மழையால் சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூண்டி, மன்னவனூர், குண்டுபட்டி, கூக்கால், கிலாவரை உள்ளிட்ட பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. தொடர்ந்து மூன்றாவது நாளாக அங்கு மழை பெய்ததால் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் சோளிங்கர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரம்பலூர், குன்னம், வேப்பூர், வெப்பந்தட்டை, களரம்பட்டி, கோனேரி பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மழை தீர்த்தது. கோடை விவசாயத்திற்கு இந்த மழை சாதகமாக இருக்கும் எனவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி நகரம், பழையபேட்டை, புதுப்பேட்டை, கட்டிகணபள்ளி, வெங்கடபுரம், தாளபள்ளி, சோமார்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடியுடன் மழை கொட்டியது. நீலகிரி மாவட்டம் ஊட்டி, தொட்டபெட்டா, மைனாலா, பைகாரா, நடுவட்டம், எமரால்ட் அவலாஞ்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் புதுமந்து, டைகர் ஹில், கோரி சோலை, பார்சன்ஸ் வேலி நீர் தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 10 மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.