நடிகர் ஆர்யா அடுத்ததாக இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான டெடி திரைப்படம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக நடிகர் ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது உடல் தோற்றத்தை முழுவதுமாக மாற்றியுள்ளார். மேலும் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிவரும் எனிமி திரைப்படத்தில் ஆர்யா வில்லனாக நடித்து வருகிறார்.
இதுதவிர சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை-3 படத்திலும் ஆர்யா நடித்துள்ளார். இந்நிலையில் ஆர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் நலன் குமாரசாமி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.