நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 275 ரன்களை குவித்துள்ளது.
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில், 378 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. குறிப்பாக நியூசிலாந்து அணியின் அறிமுக வீரரான டிவான் கான்வே அதிரடி ஆட்டத்தை காட்டி 200 ரன்களை குவித்தார். இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட் , மார்க் வுட் 3 விக்கெட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அடுத்ததாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் விளையாடியது. ஆனால் 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதிலும் கேப்டன் ஜோ ரூட் ,ரோரி பர்ன்ஸ் இருவரும் சரிவை தடுத்து நிறுத்தினர். 2-வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களை குவித்து இருந்தது.
ஆனால் 3 வது நாள் மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. அதன்பின் 4 வது நாள் ஆட்டத்தில் ஜோ ரூட் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஒல்லி போப் 22 ரன்னில் ஆட்டமிழக்க இறுதியாக ஒல்லி ராபின்சன் 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.ஒருபுறம் விக்கெட்டுகளை இழக்க ,மறுபுறம் தொடக்க வீரராக களமிறங்கிய ரோரி பர்ன்ஸ் சிறப்பாக விளையாடி 132 ரன்னில் வெளியேறினார் .இறுதியாக முதல் இன்னிங்சில் 101.1 ஓவர்களில் , இங்கிலாந்து அணி 275 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இதில் நியூசிலாந்து அணியின் டிம் சவுத்தி 6 விக்கெட், ஜேமிசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து நியூசிலாந்து அணி 2 வது இன்னிங்சில் விளையாடியது. நான்காம் நாள் ஆட்ட முடிவில், நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களை எடுத்துள்ளது. இதுவரை நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி 165 ரன்களுடன் முன்னிலை வகிக்கிறது.