தற்போது நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய செயலியான “கூ” அந்த நாட்டில் கால்பதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிபர் முகமது புஹாரி 1967 முதல் 70 வரை நடந்த உள்நாட்டு சண்டையை மேற்கோள்காட்டி டுவிட்டரில் பதிவிட்டிருந்த கருத்து வன்முறையை தூண்டும் விதமாக இருந்ததால் ட்விட்டர் நிறுவனம் அந்த பதிவை நீக்கியுள்ளது. இதையடுத்து அதிபருடைய பதிவு நீக்கப்பட்டதற்கு நைஜீரிய அரசு பதிலடி கொடுக்கும் விதமாக டுவிட்டருக்கு காலவரையற்ற தடை விதித்துள்ளதால் நைஜீரிய மக்கள் டுவிட்டரை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது டுவிட்டரை போன்று தகவல் தொடர்பினை வழங்கும் முயற்சியில் இந்தியாவை சேர்ந்த ” கூ ” சமூக வலைத்தள நிறுவனம் நைஜீரியாவில் கால் பதித்துள்ளது.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூ செயலியை உருவாக்கியவர்களில் ஒருவரான அப்ரமேயா ராதாகிருஷ்ணா ” இந்திய செயலியான கூ-வை தற்போது நைஜீரியாவில் பயன்படுத்த முடியும் என்றும், அதனை தொடர்ந்து நைஜீரியாவில் உள்ள உள்ளூர் மொழிகளிலும் இந்த சேவையை வழங்குவது குறித்து நாங்கள் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம்” என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் பலரும் அவருடைய இந்த பதிவை பார்த்து தங்களது ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வழங்கி வருகின்றனர்.
இந்த கூ செயலி கடந்த ஆண்டு அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவன முன்னாள் மாணவரான மயங்க் பிடாவட்கா மற்றும் அப்ரமேயா ராதாகிருஷ்ணா ஆகியோரால் மஞ்சள் நிறத்தில் ட்விட்டர் போன்ற தோற்றத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை கூ செயலி 3.4 டாலருக்கு அதிகமான நிதியை திரட்டியிருப்பதாகவும், தற்போது பயனர்கள் எத்தனை பேர் என்பது குறித்து கூ தகவல் வெளியிடாத நிலையில் 10 கோடி பயனர்களின் ஆதரவை அடுத்த இரண்டு வருடங்களில் பெறுவதில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக போர்ப்ஸ் இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது.