கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் செவிலியர் பணியை அதிகமாக தேர்ந்தெடுப்பதன் காரணமாக அதிக மாக பல்வேறு நாடுகளிலும், இந்தியா முழுவதும் செவிலியர் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர்கள் அதிகளவில் மலையாளிகளாக உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் மலையாள மொழி பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் கேரளாவை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மலையாளத்தில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அலுவலக மொழியான இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே பேச வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதை கண்டித்து காங்கிரஸ் தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல்காந்தி பிற இந்திய மொழிகளைப் போல மலையாளமும் இந்திய மொழி தான் என்றும், மொழிப் பாகுபாட்டை நிறுத்துங்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.