கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த நபர்களை கடலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 19ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பால், குடிநீர், மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டதால் பிற மாநிலங்களிலிருந்து கள்ளச்சந்தையில் மதுபானங்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்கும் பணியை சிலர் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நத்தம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து 150 மில்லி மீட்டர் அளவுள்ள 140 பாட்டில்கள் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், கடத்தல் பிரிவில் இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.