வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 3ஆம் தேதி நீலா என்ற 9 வயது சிங்கம் ஒன்று உயிரிழந்தது. மற்ற எட்டு சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவ குழு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டு சிங்கங்களின் உடல் நிலை மிக மோசமாக உள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு முன்பு உயிரியல் பூங்கா அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதில் சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது தொடர்பாகவும் மற்ற விலங்குகளுக்கு கொரோனா பரவாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் பேசினார். அதன்பிறகு உயிரியல் பூங்கா பேட்டரி வாகனம் மூலமாக முதலமைச்சர் உள்ளே சென்று, வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினருடன் 45 நிமிடங்கள் ஆய்வு செய்தார். அவருடன் பல அதிகாரிகளும் உடன் இருந்தனர்.