டெல்லி ஜிபி பண்ட் மருத்துவமனையில் தாய்மொழியில் பேச அனுமதி இல்லை என்ற உத்தரவை மருத்துவ நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது.
டெல்லியிலுள்ள கோவிந்த் பல்லப் பந்த் என்ற முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் செவிலியர்கள் மலையாளத்தில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்து இருந்தது. கேரளாவை சேர்ந்த செவிலியர்கள் இந்த மருத்துவமனையில் அதிகளவில் பணியாற்றுகின்றனர். அவர்கள் மலையாளத்தில் பேசும்போது சக ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடம் மலையாளத்தில் பேசுவதாகவும், அது சிரமத்தை தருவதாகவும் செவிலியர்கள் புகார் அளித்தனர்.
இதனடிப்படையில் அங்கு உள்ள நோயாளிகள் மற்றும் சக பணியாளர்களுக்கும் மலையாளம் தெரியாத போது அந்த மொழியில் பேசக்கூடாது எனவும், இந்தி அல்லது ஆங்கிலத்திலேயே பேச வேண்டும் என்று மருத்துவ நிர்வாகம் கூறியிருந்தது. இதற்கு செவிலியர்கள் மட்டுமல்லாமல் பல தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும் இந்த சுற்றறிக்கை பெரும் சர்ச்சையை ஆன நிலையில் இதனைத் திரும்பப் பெற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து இந்த சுற்றறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது.