ஈராக்கில் குர்திஷ் இன மக்கள் தங்கியுள்ள, அகதிகள் முகாமில் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டதில், மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
துருக்கியில் வாழும் குர்திஷ் இன மக்கள் தங்களுக்கென்று தனியாக குர்திஷ்தான் என்ற நாடு அமைக்கும் நோக்கில், அரச படையினருக்கு எதிராக பல வருடங்களாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். மேலும் துருக்கியின் எல்லைப் பகுதியில் இருக்கும் சிரியா நாட்டிலும், குர்திஷ் போராளிகள் அமைப்பு உள்ளது.
எனவே சிரியாவில் தங்கி, துருக்கி மீது அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் துருக்கியின் அரச படையினரும் தாக்குதல் நடத்துகிறார்கள். இதனால் கடந்த 1990 ஆம் வருடத்திலிருந்து குர்திஷ் இன மக்கள் அதிகமானோர் துருக்கியில் இருந்து வெளியேறி ஈராக்கில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
அங்கு மஹ்மூர் நகரில் ஐநாவின் உதவியுடன் அவர்களுக்காக அகதிகள் முகாம் அமைக்கப்பட்டு அதில் வாழ்ந்து இருக்கிறார்கள். இதனிடையே குர்திஷ் போராளிகள் குழு, ஈராக்கில் இருந்து கொண்டு துருக்கி மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இதற்கு பதிலடியாக துருக்கியும் தாக்குதல் நடத்துகிறது.
இந்நிலையில் ஈராக்கில், அகதிகள் முகாமில் வசிக்கும் குர்திஷ் மக்களை குறிவைத்து, நேற்று துருக்கி விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. ஆளில்லா விமானத்தின் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டதில், குர்திஷ் இன மக்கள் மூவர் பலியாகியுள்ளனர். இதில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.