நடிகர் பாபி சிம்ஹா மீண்டும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர் பாபி சிம்ஹா நேரம், சூது கவ்வும், ஜிகர்தண்டா, இறைவி, பாம்பு சட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் முதன் முறையாக கன்னட திரையுலகில் ‘777 சார்லி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கிரண் ராஜ் இயக்கியுள்ள இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. அதன்படி இந்த படத்தின் மலையாள பதிப்பின் ரிலீஸ் உரிமையை பிரித்திவிராஜ் கைப்பற்றியுள்ளார்.
மேலும் இந்த படத்தின் தமிழ் பதிப்பின் ரிலீஸ் உரிமையை கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன்பென்ச் நிறுவனம் மூலம் கைப்பற்றியுள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட திரைப்படங்களில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் ‘சியான்’ 60 படத்திலும் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.