பேஸ்புக்கில் நேரலையில் தற்கொலை செய்து கொல்லப் போவதாக அறிவித்த நபரை ஃபேஸ்புக் நிறுவனம் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் அவரை காப்பாற்றியுள்ளனர்.
டெல்லியில் சைபர் பிரிவு போலீசாருக்கு அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் அலுவலகத்தில் இருந்து ஒரு மெயில் வந்தது. அதை எடுத்து படித்தபோது ஒரு நபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் எனவும், அவரை காப்பாற்றும் படியும் தெரிவித்திருந்தது. இதையடுத்து சைபர் போலீசார் தற்கொலைக்கு முயன்ற நபரின் இருப்பிடத்தை கண்டறிந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கதவை உடைத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த நபரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அவர் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். இதுகுறித்து டெல்லி நகர காவல்துறை துணை கமிஷனர் தெரிவித்துள்ளதாவது: “அந்த வீடியோவை நாங்கள் பார்த்த போது, அந்த நபர் கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார். கதவை திறக்குமாறு அவரது குழந்தைகள் சத்தம் போட்டனர். ஆனாலும் அவர் கதவைத் திறக்காமல் தற்கொலைக்கு முயன்றார். முதலில் அவர் டெல்லியை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் பேஸ்புக் கணக்கில் இருந்த தொலைபேசி எண்ணிற்கு போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் தங்களின் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள் முகவரியை கண்டுபிடித்தனர். அவர் டெல்லி துவர்காவின் பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று கண்டுபிடிக்கப்பட்டு, கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர் அவரை காப்பாற்றினர்” என அவர் கூறியுள்ளார்.