கொரோனா நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்சை யானைகள் வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் மூலக்கடை பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை போன்ற மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளது. இதனையடுத்து அந்த காட்டு யானைகள் தட்டாம்பாறை-சுல்தான் பத்தேரி சாலையில் அங்குமிங்கும் நடந்து சென்றன.
அப்போது கொரோனா நோயாளிகளை ஏற்றி சென்ற ஆம்புலன்சை யானைகள் வழிமறித்துள்ளது. இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். அதன்பிறகு ஆம்புலன்ஸ் பாதுகாப்பாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது.