ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தேவையின்றி வெளியில் சுற்றி திரிபவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சாலட்சுமி தலைமையில் காவல்துறையினர் தினசரி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதிகளில் ரோந்து பணிக்காக சென்றபோது அங்கு ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி சிலர் இருசக்கர வாகனங்களில் சுற்றிக் கொண்டிருந்தனர். அதன்பின் காவல்துறையினர் வாகனங்களில் சுற்றி திரிபவர்களை நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதேபோன்று புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்ஸ்பெக்டர் சேதுபதி, சப்- இன்ஸ்பெக்டர் சேகர் போன்றோர் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்கள் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கூவத்தூர் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களது மோட்டார் சைக்கிள் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின் அணைக்கட்டு காவல்துறையினர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரது வாகனத்தை பறிமுதல் செய்தனர்.