திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே தாயை சரமாரியாக தாக்கிய தந்தையை மகன்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செங்கட்டான்பட்டியில் வசித்து வந்த கூலித்தொழிலாளியான வனராஜ் ( 51 ) என்பவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வனராஜ் கோபத்தில் அருகில் இருந்த கத்தியால் ஈஸ்வரியை சரமாரியாக குத்தியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரி அலறி துடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த சத்தத்தை கேட்டு அங்கு வந்த மகன்கள் ஊர்காலன், முத்துசாமி ஆகிய 2 பேரும் அம்மாவை ஏன் கத்தியால் குத்தினீர்கள் ? என்று கேட்டு வனராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே முற்றிய வாக்குவாதத்தில் கோபமடைந்த ஊர்காலனும், முத்துசாமியும் அருகிலிருந்த உருட்டுக்கட்டையால் வனராஜை மிக மோசமாக தாக்கியுள்ளனர்.
அதில் பலத்த காயமடைந்த வனராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இதற்கிடையே கத்தியால் குத்தப்பட்ட ஈஸ்வரி சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிந்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் ஊர்க்காலன், முத்துசாமி ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.