ரெனால்ட் நிறுவனம் தற்போது டிரைபர் எஸ்.யு.வி என்ற புதிய மாடல் காரை அறிமுகம் செய்ய உள்ளது .
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இதற்கு முன்பு க்விட் மாடல் மூலம் இந்திய வாகன சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் , தற்போது டிரைபர் என்ற பெயரில் எஸ்.யு.வி என்ற புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளது . மேலும் , இந்த வாகனத்துக்கான முன்பதிவு ஆகஸ்டு 17-ந் தேதி தொடங்கப்பட்டிருந்த நிலையில் , இம்மாதம் 28-ந் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது .
இந்த புதிய எஸ்.யு.வி 4 மீட்டருக்கும் குறைவான பிரிவில் உருவாகி உள்ளது . மேலும் இந்த காரின் நீளம் 3,990 மி.மீ., அகலம் 1,637 மி.மீ, உயரம் 2,656 மி.மீ. ஆகும். இதன் சக்கரங்களின் ஆரம் 182 மி.மீ. ஆகும். இந்த மாடல் காரில் 84 லிட்டர் கொள்ளளவில் பொருட்களை வைக்கும் இட வசதி கொடுக்கப்பட்டுள்ளது . குறிப்பாக , மூன்றாவது வரிசை இருக்கையை மடக்குவதன் மூலம் இட வசதி 625 லிட்டராக அதிகரிக்கும்.
இந்த காரானது புரெஜெக்டர் ஹெட்லேம்ப், பகலில் ஒளிரும் டி.ஆர்.எல். விளக்கு, ரூப் பார், 15 இன்ச் அலாய் சக்கரங்கள், கழுகின் அலகு போன்ற பின்புற விளக்கு, ஸ்கிட் பிளேட் ஆகிய அம்சங்களுடன் அறிமுகமாக உள்ளது . மேலும் , காரின் உள்புறம் 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது .
குறிப்பாக , இரண்டாவது வரிசையில் உள்ளவர்களுக்கென ஏ.சி. வசதியும் , மூன்றாவது வரிசையில் உள்ளவர்களுக்காக மேற்கூரையில் ஏ.சி. வசதி என குளிர்ச்சியான பயண அனுபவத்தை தரும் வகையில் டிரைபர் எஸ்.யு.வி. உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் , பொத்தான் மூலம் ஆன்-ஆப் வசதி, பாதுகாப்புக்கு 4 ஏர் பேக்குகள் என அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது .
இது 72 பி.எஸ். திறனை 6,250 ஆர்.பி.எம். வேகத்திலும், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 3,500 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. மேலும் , 5 ஸ்பீடு மானுவல் டிரான்ஸ்மிஷன் வசதி மற்றும் ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்ட மாடலும் உருவாக்கப்பட்டுள்ளது . குறிப்பாக டிரைபர் அறிமுகம் மூலம் தனது விற்பனை சந்தையை இரட்டிப்பாக உயர்த்திக் கொள்ள அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.