கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மன்னம்பாடியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரியில் மீன் பிடி திருவிழாவை கிராம மக்கள் நடத்தி, அதில் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு மீன் பிடிப்பார்கள். இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே ஏரியில் மீன்பிடித் திருவிழா நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. அங்கு பல கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து போட்டி போட்டுக்கொண்டு ஏரியில் மீன் பிடித்தனர்.
ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஏரிக்குள் இறங்கி மீன் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரை கண்டு அங்கிருந்த கிராம மக்கள் தாங்கள் பிடித்து வைத்திருந்த மீன்களுடன் சிதறி அடித்துக் கொண்டு ஓடினர். மேலும் பொதுமக்கள் மீண்டும் ஏரியில் இறங்காமல் இருக்க 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.