நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்திலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வு நடைபெறாது என்று அவர் கூறியுள்ளார். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் முறையே 12,353 மற்றும் 2,321 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.