தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடைபெறுவதாக இஸ்ரேல் பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்ரேலில் கடந்த மார்ச் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆட்சியமைப்பதற்கு 61 இடங்கள் தேவைப்படுகின்ற நிலையில், பெஞ்சமின் தலைமையிலான கூட்டணி கட்சி 54 இடங்களில் வெற்றி வாகை சூடியது. இதனையடுத்து பெஞ்சமின் புதிய அரசை உருவாக்க வேண்டுமென்றால் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதற்காக அவருக்கு 28 நாட்கள் காலக்கெடு கொடுக்கப்பட்டது.
ஆனால் பெஞ்சமினால் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், மீண்டும் பொதுத் தேர்தல் இஸ்ரேலில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து தேசிய ஒற்றுமை அரசை கூட்டணியாக அமைத்துள்ளது. இந்த எதிர்க்கட்சிக் கூட்டணியானது கடந்த தேர்தலில் 2 ஆவது இடம்பிடித்த யேஸ் அதித் கட்சியினுடைய தலைவர் தலைமையில் உருவாகியுள்ளது.
மேலும் இந்த கூட்டணியில் நஃப்தாலி பென்னெட் தலைமையில் இயங்கும் யாமினா கட்சி மிக முக்கியமாக திகழ்கிறது. இதனிடையே இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் புதிய ஆட்சியை அமைப்பதற்கு தேவைப்படுகின்ற பெரும்பான்மையை நிரூபிக்க வருகின்ற 14ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்குமானால் யாமினா கட்சியின் தலைவரான நஃப்தாலி பென்னெட் இஸ்ரேலின் பிரதமர் பொறுப்பை ஏற்பார். இந்நிலையில் பிரதமர் நெதன்யாகு கூறியதாவது, இஸ்ரேலிய நாடு உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய தேர்தல் மோசடியை சந்தித்து வருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து அரசியலில் தொடர்ந்து குழப்பம் நிலவி வந்தால் உள்நாட்டில் அரசியல் தொடர்பான வன்முறை உருவாகும் என்று அந்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.