கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள கீரைத்துறை காவல்துறையினர் அவர்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சிந்தாமணி ரோட்டில் இருக்கும் வாழைத் தோப்பு பகுதியில் சிலர் கஞ்சா விற்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அவர்களை கண்டதும் வாலிபர் ஒருவர் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார்.
உடனடியாக காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரித்தபோது அவர் அருள்தாஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அப்பகுதியில் சைக்கிளில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரமேஷை கைது செய்து அவரிடம் இருந்த 3 கிலோ கஞ்சாவையும் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளனர்.