மெக்சிகோவில் உள்ள டெர்ராஸாஸ் டெல் வேலே என்ற பகுதியில் மர்ம நபர் ஒருவர் வாக்குச்சாவடியில் துண்டிக்கப்பட்ட மனித தலை பாகத்தை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவில் 20 வருடங்களுக்குப் பிறகு வன்முறையாக நடைபெற்று வரும் இடைக்கால தேர்தலில் வாக்களிப்பதற்காக மெக்சிகன் மக்கள் பலரும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் 97 அரசியல்வாதிகள் இந்த தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை வன்முறையாக கொல்லப்பட்டுள்ளதாகவும், 935 வன்முறை தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் சில அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டெர்ராஸாஸ் டெல் வேலே என்ற பகுதியில் உள்ள ஒரு வாக்கு சாவடி மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மர்ம நபர் ஒருவர் அந்த வாக்குச் சாவடியில் துண்டிக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் மற்றும் தலை பாகத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் கட்டி அங்கு வீசிவிட்டு சென்றுள்ளார். இதனால் அந்த வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டாரா அல்லது பிடிபட்டாரா என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர். மேலும் அந்த மர்ம நபர் வீசி சென்ற உடல் பாகங்கள் அனைத்தும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த சம்பவம் தேர்தல் தொடர்பாக நடந்துள்ளதா என்பது குறித்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.