காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் இரும்புக்கடை வியாபாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்போரூர் அருகே மானமதி பகுதியில் உள்ள கங்கையம்மன் கோயில் குளம் அருகே நேற்று முன்தினம் இளைஞர்கள் சிலர் சுத்தம் செய்யும் போது கோயிலின் மேல் தளத்தில் பை ஒன்றை கண்ட இளைஞர்கள் அதனை அங்கிருந்து எடுத்து அப்புறப்படுத்த முயற்சிக்க, அதில் இருந்த மர்மப்பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் காயமடைந்த 5 பேரும் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களில் சூர்யா மற்றும் திலீப் ராகவன் ஆகிய இளைஞர் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து தகவலறிந்த விரைந்து வந்த மானமதி போலீசார் மர்மப்பொருளுடன் பையை கோயிலில் கொண்டு வந்து வைத்தவர்கள் யார் என்பது குறித்தும் உயிர் சேதம் ஏற்படுத்திய மர்மப்பொருள் என்ன என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மர்ம பொருளான ராக்கெட் லாஞ்சர் குண்டு வெடித்ததில் இருவர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த ராக்கெட் லாஞ்சர் குண்டை பழைய இரும்பு கடை வியாபாரி முகமது ரபீக் வைத்தது தெரியவந்தது. இதையடுத்து இரும்பு கடை வியாபாரியை பிடித்து திருப்போரூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடக்கிறது. 2 ராக்கெட் லாஞ்சர் குண்டு எப்படி கிடைத்தது என்பது குறித்து காவல் அதிகாரி விசாரணை நடத்துகின்றனர்.