பண்ணை வீட்டில் இருக்கும் கிணற்றில் தொழிலதிபர் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை பகுதியில் சுப்புராம் என்ற தொழிலதிபர் வசித்து வந்துள்ளார். இவர் பிரிண்டிங் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமாக கோழிப் பண்ணையும், பண்ணை வீடும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் தனது பண்ணை வீட்டிற்கு சென்ற சுப்புராம் கார் டிரைவரிடம் தண்ணீர் வாங்கி வரும்படி கூறியுள்ளார். இதனை அடுத்து கார் டிரைவரான வசந்தகுமார் என்பவர் தண்ணீர் வாங்கிவிட்டு பண்ணை வீட்டிற்கு சென்று பார்த்தபோது சுப்புராம் அங்கு இல்லை. இதனை தொடர்ந்து அங்கு உள்ள அனைத்து இடங்களிலும் வசந்தகுமார் தேடிப் பார்த்த போது சுப்புராமின் செருப்பு அங்குள்ள கிணற்றில் மிதந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் பண்ணை வீட்டில் பணிபுரியும் ஆட்களின் உதவியோடு கிணற்றுக்குள் இறங்கி பார்த்தபோது சுப்புராம் சடலமாகக் கிடப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து உத்திரமேரூர் காவல் நிலையத்தில் சுப்புராமின் மகன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுப்புராமை கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளனரா அல்லது அவரே கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவல்துறையினர் வசந்தகுமார், பண்ணை வீட்டில் பணிபுரியும் விஜயலட்சுமி, ராஜேந்திரன், ஜெயபிரகாஷ் மற்றும் வேல் போன்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.