தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கடும் தட்டுப்பாட்டால் தடுப்பூசி போடும் பணி பெரும்பாலான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. கையிருப்பில் 2000 டோஸ்கள் மட்டுமே உள்ளதால், தற்போது 45 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ராமநாதபுரம், நெல்லை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.