பிள்ளைகளின் தற்கொலைக்கு காரணமான தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ராதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தனலட்சுமி, திவ்யா என்ற 2 மகள்களும், விக்னேஸ்வரன் என்ற ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் திருச்சியில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் தனலட்சுமி பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். அதன்பின் ஒரு தனியார் பள்ளியில் திவ்யா 11-ஆம் வகுப்பும், விக்னேஸ்வரன் 8-ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சித்ராதேவி அரளி விதையை அரைத்து தனது மூன்று பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் அதை தின்று தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த 4 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் திவ்யா மற்றும் விக்னேஸ்வரனுக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் சித்ரா தேவி மற்றும் தன லட்சுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குடும்பத்தினரின் தற்கொலைக்கு காரணமான நந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் நந்தகுமார் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை செல்போன் உபயோகிக்க கூடாது மற்றும் டிவி பார்க்கக்கூடாது என்று துன்புறுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர் கோபம் வரும் சமயத்தில் வீட்டில் இருக்கும் இரும்பு குழாயால் மகன் மற்றும் மகளை அடித்து சித்திரவதை செய்துள்ளார். இவ்வாறு தினமும் தனது குடும்பத்தினரிடம் சைக்கோ போல் நடந்து நந்த குமார் கொடுமைப்படுத்தியதால் 4 பேரும் தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.