ஊரடங்கின் விதிமுறைகளை மீறி யானை மீது மணமகனை அழைத்து செல்லும் வீடியோ வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும், இளம் பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு இரு குடும்பத்தினரின் உறவினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் அங்கு சென்றுள்ளனர். இந்நிலையில் செண்டை மேளம் முழங்க யானை மீது மணமகனை அமர வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த ஆலங்குளம் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அங்கு சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல் துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நோய் பரப்புதல், தடைகளை மீறி கூட்டத்தை கூட்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் மணமக்களின் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்து 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இவ்வாறு ஊரடங்கு நேரத்தில் விதிமுறைகளை மீறி மணமகனை யானை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.