போதையில் பொதுமக்களை பயங்கர ஆயுதங்களுடன் மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் மணிகண்டன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன் அடிக்கடி போதையில் கம்பி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களுடன் அப்பகுதியில் செல்லும் மக்களை பயமுறுத்தி வந்துள்ளார். மேலும் மணிகண்டன் போதையில் அப்பகுதியில் வசிக்கும் மக்களை கத்தி மற்றும் கற்களால் தாக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அவர் கத்தியால் குத்தி விடுவேன் என்று கூறி ஒரு பெண்ணை மிரட்டிய போது, அங்கிருந்த ஒருவர் அதனை வீடியோவாக எடுத்துள்ளார்.
இதனை பார்த்ததும் கோபம் அடைந்த மணிகண்டன் வீடியோ எடுத்த நபரையும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டனுக்கு போதையில் மனநலம் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை நீலாம்பூரில் இருக்கும் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.